fun

சும்மா என்றால் சும்மாவா? சும்மா படிங்க

fun

ஆமாங்க. சும்மா ‘சும்மா’ வைப்பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க. என்ன இத்தன ‘சும்மா’ ன்னு பாக்கீறீங்களா? இது ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றியப் பதிவு.

சும்மா என்ற வார்தைக்கு நிறைய பொருள்கள் உண்டு. அதைப் பற்றிதான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?” என்று கேட்டால், அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்” என்று. அப்படியென்றால் சும்மா என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.

ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் அவனிடம் “எதுக்கு என்னைப் பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும். இங்கு அவன் அந்தப் பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று சும்மா என்கிறான்.

“உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியைக் கேட்பீர்கள் “எதற்காகக் கேட்கிறாய்?” என்று. அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள். இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.

“என்ன பண்ற?” – “சும்மா, படிச்சுக்கிட்டு இருக்கேன்”: இங்குச் சும்மா என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.

“என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?” – “இந்தப் பக்கம் வேலை இருந்தது. அப்படியே உன்னையும் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்”: இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

“நேர்க்காணல் என்னவாயிற்று?” – “வழக்கம் போலதான். வேலை கிடைக்காது என்று தெரியும். சும்மாதான் போயிட்டு வந்தேன்”: இங்கு ‘சும்மா’ என்பது வேலை கிடைக்காது என்று தெரிந்திருந்தும் ஒரு அனுபவத்திற்காகச் சென்றதைக் குறிக்கிறது.

“எங்கடா போயிட்டு வர?” – “சும்மா, cinema வுக்குப் போயிட்டு வரேன்”: இங்குப் பொழுதுபோக்கிற்காகச் சென்றதைக் குறிக்கிறது.

“புது பேனாவா?” – “ஆமாம். இந்தப் புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது”: ‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.

“இந்தக் குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு. இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.

“சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”: ‘சும்மா’ என்றால், வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.

“பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளைச் சும்மா எடுத்துக்கொள்ளக் கூடாது”: இங்கு அலட்சியம் என்னும் பொருளில் வருகிறது.

“சும்மா பேசிக்கிட்டே இருக்காதே”: தொண தொண என்று தொடர்ச்சியாகப் பேசுதல்.

“சும்மா எதுக்கு சண்டை போடுகிறீர்கள்?”: வீணாக என்னும் அர்த்தம்.

வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.

யாராவது உங்களைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம். அதாவது “என்னைத் தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதைச் சொல்கிறோம்.

“அந்தப் பையில ஏதாவது இருக்கா?” – “இல்ல.சும்மாதான் இருக்கு”: அதாவது காலியாக இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால், “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள். சும்மாவா வருவது?” என்று கேட்போம். சும்மா என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.

“அய்யோ! பாம்பு!” – “அய்யோ! எங்க?” – “ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்”: ‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

“அம்மா என்றால் சும்மா இல்லடா”: ‘சும்மா’ என்பது ‘சாதாரணம்’ என்ற அர்த்தத்தில் வருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது. சும்மா பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றால் சும்மா(அர்த்தம்: நிறைய) எழுதிக்கிட்டே போகலாம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

  1. Bala Murugan ஜூலை 1, 2014

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading